மக்களவைத் தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த முறை தமிழகத்தில் திமுக, அதிமுக மற்றும் பாஜக தலைமையில் மூன்று முக்கிய கூட்டணிகள் அமையவுள்ளன. திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் இறுதிகட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. கடந்த முறை ஒரே அணியாக தேர்தலை சந்தித்த பாஜகவும், அதிமுகவும் தற்போது தனித்தனியாக களமிறங்கியுள்ள நிலையில், தங்களின் கூட்டணிக்கு கட்சிகளை இழுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த ஆண்டுகளில் அதிமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்த சமத்துவ மக்கள் கட்சி, வருகின்ற தேர்தலில் எந்த அணியில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடவுள்ளதாக சரத்குமார் தெரிவித்துள்ளார். பாஜகவுடான கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவடைந்ததாகவும், பிரதமர் மோடியை 3-வது பிரதமராக தேர்வு செய்ய பாஜகவுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாகவும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். சரத்குமார் தரப்பில் இருந்து பாஜகவிடம் கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய இரண்டு தொகுதிகளை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருப்பதாக தெரிகிறது. முன்னதாக சரத்குமார் தென்காசி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் சரத்குமார் இணைந்து போட்டி.
![](https://paribhasai.in/wp-content/uploads/2024/03/raj.jpg)