108 திவ்ய தேசங்களில் 47வது கோவிலாக மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு கோயில் திருப்பணிகள் நடைபெற்றது. இந்நிலையில், எட்டு கால யாக பூஜைகள் நடைபெற்றதை அடுத்து ஸ்ரீ தேவி, பூதேவி, சமய சுந்தரராஜ பெருமாள் யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டு வேதவிற்பனர்கள் மந்திரம் முழங்க கோவிலில் உள்ள அனைத்து விமானங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கூடல் அழகர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சாமியின் அருள் பெற்று சென்றனர். மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க மதுரை திடீர் நகர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.