அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் – ஷேக் ஷாஜகான் மீது வழக்குப்பதிவு.

மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷேக் ஷாஜகான் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள், சந்தேஷ்காளி பகுதியில் உள்ள பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அவர்களுடைய நிலங்களை அபகரித்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஷேக் ஷாஜகானின் ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்ட நிலையில், நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்த ஷேக் ஷாஜகான் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனிடையே ஷேக் ஷாஜகானை 6 ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்கம் செய்வதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக கடந்த ஜனவரி 5-ந்தேதி ரேஷன் விநியோக முறைகேடு குறித்து விசாரணை நடத்துவதற்காக சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள், அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சந்தேஷ்காளியில் உள்ள ஷேக் ஷாஜகானின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தி வருகிறனர். அங்கு சோதனை நடத்தி வரும் மத்திய விசாரணை அமைப்புகளின் பாதுகாப்புக்காக, அந்த பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!