டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் வரும் பிரதமர் மோடியை, விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் காலை 11 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு பிரதமர் செல்கிறார். அதன் பின்னர் சாலை மார்க்கமாக அகஸ்தீஸ்வரம் ஏழுசாத்துபட்டு பகுதியில் அமைந்துள்ள கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பாஜக பரப்புரை பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.இந்த பொதுக்கூட்டத்தில், பாஜகவுடன் கூட்டணியை இறுதி செய்துள்ள ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், ஜான் பாண்டியன் உள்ளிட்டோரும், பாரதிய ஜனதாவுடன் தனது சமத்துவ மக்கள் கட்சியை இணைத்த சரத்குமாரும் கலந்து கொள்கின்றனர். நண்பகல் 12.15 மணி வரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும் பிரதமர் மோடி, அதன் பின் மீண்டும் ஹெலிகாப்டரில் புறப்பட்டு, கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு செல்கிறார். மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், நடப்பாண்டு ஐந்தாவது முறையாக பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வருகிறார்.
பிரதமர் மோடி தமிழகம் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
