பாஜக ஆட்சியில் 140 கோடி இந்தியர்களும் அமைதியாக வாழ்கின்றனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் முதல்முறையாக காஷ்மீருக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். அப்போது ஜம்மு-காஷ்மீரில் ரூ.6,400 கோடி மதிப்பு திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஸ்ரீநகரில் வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ஜம்மு காஷ்மீர் விழாவில் கலந்துகொண்டு தொடங்கிவைத்தார். ஜம்மு-காஷ்மீரில் வேளாண் பொருளாதாரத்தை மேம்படுத்த 5,000 கோடி மதிப்பு திட்டங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் தல மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தேர்வான சுற்றுலாத் தலங்களையும் அறிவித்தார். பின்னர் பேசிய பிரதமர்; ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் 6 திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
இது தவிர, அடுத்த கட்ட ஸ்வதேஷ் தர்ஷன் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் கீழ், ஜம்மு காஷ்மீர் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு சுமார் 30 திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாவின் அனைத்து சாதனைகளும் முறியடிக்கப்படுகின்றன. 2023ல் மட்டும் 2 கோடிக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்துள்ளனர். சுற்றுலாத்துறை வளர்ச்சி மூலம் காஷ்மீரின் பொருளாதாரம் முன்னேறும், வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவித்தார். அனைத்து வாக்குறுதிகளையும், திட்டங்களையும் நிறைவேற்றி காஷ்மீர் மக்களின் இதயங்களை நிச்சயம் வென்றெடுப்பேன்.
காஷ்மீர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே மோடியின் கியாரண்டி ஆகும் என்று தெரிவித்த அவர், வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றப்பட்டிருப்பதன் மூலம், பல்வேறு வாய்ப்புகளுக்கான மாநிலமாக காஷ்மீர் மாறியுள்ளது. மேலும், நாட்டின் கிரீடமாக ஜம்மு காஷ்மீர் திகழ்கிறது. இந்த புதிய காஷ்மீருக்காக பல ஆண்டுகளாக காத்திருந்தோம். உங்களது மலர்ந்த முகங்களை பார்க்கும்போது 140 கோடி மக்களும் திருப்தியடைவார்கள். பாஜக ஆட்சியில் 140 கோடி இந்தியர்களும் அமைதியாக வாழ்கின்றனர் இவ்வாறு கூறினார்.