அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஒபிஎஸ், இபிஎஸ் இல்லாத அதிமுகவை உருவாக்குவதே தங்கள் லட்சியம் என்று மறைந்த ஜெயலலிதா பிறந்த நாளில் சபதம் செய்தார். இதற்காக இரண்டாவது தர்மயுத்தத்தை தொடங்கி உள்ளதாக ஏற்கனவே ஒபிஎஸ் அறிவித்தார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை ஏற்படுத்தி, அனைத்து மாவட்டத்திற்கும் நிர்வாகிகளை நியமித்து தனி அணியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் மக்களவை தேர்தல் நெருங்கிவரும் சூழலில் அதிமுக மீட்பு நடவடிக்கை ஒபிஎஸ் மேலும் தீவிரப்படுத்தியுள்ளார். அதேவேளையில் இபிஎஸ்ஸை பன்னீர் செல்வம் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
திமுகவுடன் இபிஎஸ் திடீரென நெருக்கத்தை காட்டிவருவதாக குற்றம் சாட்டியுள்ள ஒபிஎஸ், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் கொள்கைக்கு மாறாக செயல்பட்டு வருவாதாகவும் சாடிவருகிறார்.அது மட்டுமல்லாமல் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய உள்ள நிலையில் பாஜகவுடன் தான் கூட்டணி என்று உறுதியாக உள்ள ஒபிஎஸ், அக்கட்சியுடன் இணைந்தே தேர்தலை சந்திக்க இருப்பதில் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இதற்காக பாஜகவுடன் தொடர்ந்து பேசிவருவதாகவும் அவர் கூறிவருகிறார். அதிமுக தொடர்பான வழக்குகள் இபிஎஸ்-க்கு சாதமாகவே அமைந்துவிட்ட நிலையிலும் சட்டப்பூர்வமாக அதிமுகவை தங்கள் வசம் கொண்டு வரும் நடவடிக்கையை ஒபிஎஸ் தீவிரப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் வரும் மக்களவை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று ஒபிஎஸ் அறிவித்துள்ளது இபிஎஸ் தரப்பை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. எனினும் அதற்கு சற்று கூட வாய்பில்லை என இபிஎஸ் தரப்பு வெளியே கூறிவந்தாலும் எங்கே இரட்டை இலை சின்னத்துக்கு ஆபத்து வந்து விடுமோ? என்ற அச்சம் கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் எழுந்ததாகவே கூறப்படுகிறது.
ஏன்னென்றால் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் ஏற்கனவே ஒபிஇஸ் தரப்பு மனு அளித்துள்ளநிலையில் அதற்கான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தங்களுக்கு சின்னம் கிடைக்க வேண்டும், அல்லது சின்னம் முடக்கப்பட வேண்டும் என்பதும் அவர்களது குறிக்கோளாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.. இது பற்றி பன்னீர் செல்வமே வெளிப்படையாக சில கருத்துகளை தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னம் தற்காலிகமாகவே ஈரோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு மட்டும் பழனிசாமி தரப்பிற்கு வழங்கப்பட்டது. எனவே இறுதியாக அது தங்களுக்கு கிடைக்கும் என்றும் நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்றும் உறுதியாக குறிப்பிட்டுள்ளார். இதற்காக தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளதாகவும், மக்களவை தேர்தலில் இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றும் இதற்காக தேர்தல் கமிஷனை தொடர்ந்து நாடுவோம் என்று தெரிவித்த அவர்கள் இதுவரை அதிமுகவை உரிமை கோரும் மனுக்கள் மீது வெளியான தீர்ப்புகள் அனைத்தும் தற்காலிகமானதுதான் என்றும் விளக்கமளித்துள்ளார். கூட்டணி விவகாரத்தில் பாஜகவுடன் எந்த பிரச்னையும் இல்லை என்று தெரிவித்துள்ள ஒபிஎஸ், நாடு சுபிட்சமாக இருக்க வேண்டும் என்பதற்கான காரியங்களில் தொண்டர்கள் மீட்புக் குழு ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் வெளிநாடுகளில் இந்தியாவின் புகழை எடுத்து சென்றுள்ள நரேந்திர மோடியே மூன்றாவது முறையாக பிரதமராக வரவேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளதாகவும், ஜெயலலிதாவுக்கு பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளதை வரவேற்றுப்பதாகவும் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் இரண்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் அதன் அடிப்படையில் தான் விருப்ப மனுக்கள் வாங்;கப்படும் என்றும் ஒபிஎஸ் திட்டவட்டமாக கூறிவரும் நிலையில், இரட்டை இலை சின்னம் உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்காக உள்ளது. அதை தேர்தல் ஆணையமே குறிப்பிட்டுள்ளது என ஒபிஎஸ் ஆதரவாளர் பண்ரூட்டி ராமசந்திரன் ஆகியோர் அநிவித்துள்ளனர். தேர்தல் அறிவிப்பு வரும் போது தேர்தல் ஆணையம் ஒரு நல்ல முடிவு எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்..
மக்களவை தேர்தல் அறிவிப்பு விரைவில் எதிர்ப்பாக்கப்படும் நிலையில், இரட்டை இலை சின்னத்திற்கு ஒபிஎஸ் உரிமை கோரிவருவது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. யார் விருப்பம் எப்படி இருந்தாலும், இறுதி முடிவு நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்திடமே உள்ளது. எனவே எது எப்படியோ பொறுத்திருந்து பார்த்தால் தான் உண்மை தெரியவரும்.