மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தை 2018-ம் ஆண்டு பிரதமர் மோடி அறிவித்தார். இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் சோதனை விமானிகளாக இருப்பார்கள் என்று கடந்த 2019-ம் ஆண்டு இஸ்ரோ தெரிவித்தது. முதல் முறை மனிதர்களை அனுப்பும் விண்வெளிப் பயணம் என்பதால் இஸ்ரோ பல்வேறு கட்ட ஆய்வுகளைச் செய்து வருகிறது.
பெங்களூரில் செப்டம்பர் 2019-ம் ஆண்டு முடிக்கப்பட்ட இத்திட்டத்திற்கான முதல் நிலை விண்வெளி வீரர்கள் தேர்வில் 12 பேர் தகுதி பெற்றனர். இந்திய விமானப்படையின் கீழ் வரும் ஏரோஸ்பேஸ் மெடிசின் நிறுவனத்தில் தேர்வு நடைபெற்றது. பல சுற்று தேர்வுகளுக்குப் பிறகு, இறுதியாக 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் செல்லும் வீரர்களின் பெயர்கள் சஸ்பென்சாக வைக்கப்பட்டிருந்தது.
பெங்களூரில் பயிற்சி பெற்றுவரும் இந்த 4 வீரர்களையும் இன்று திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பிரதமர் மோடி அறிமுகப்படுத்துவார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு சென்றார். பின்னர் இந்திய விண்வெளித் துறையில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தும் வகையில் 3 முக்கியமான விண்வெளி உள்கட்டமைப்புத் திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.
இதை தொடர்ந்து, ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 பேரை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப், சுபான்{ சுக்லா ஆகிய 4 பேரை பிரதமர் மோடி கேரளாவில் இருக்கும் இஸ்ரோ மையத்தில் இருந்து உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.