நாளை ஸ்ரீராமர் சிலை பிரதிஷ்டை: விழாக் கோலம் பூண்டது அயோத்தி

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்ததாக நம்பப்படுகிறது. இந்நிலையில், அவருக்கான கோயிலை கட்ட கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள் என பிரமாண்டமாக ரூ.1,100 கோடியில் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோயிலில் நாளை குழந்தை ராமர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது. நாளை பிற்பகல் 12.29.08 மணி முதல் 12.30.32 வரை (84 விநாடிகளில்) பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. பதினாறு பொருத்தங்களில் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைந்துள்ளதால் இக்குறுகிய காலத்தில் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது என ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறியுள்ளார். குழந்தை ராமரின் சிலையின் பீடம் 3 அடி உயரத்தைக் கொண்டது. இச்சிலை மக்ரானா மார்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது. ராமர் சிலை பிரதிஷ்டை, பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், கோயில் அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் நாடு முழுவதும் இருந்து முக்கிய தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்க வைக்க திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!