தமிழ் சினிமாவில் எப்போதும் பண்டிகை தினங்களான தீபாவளி, பொங்கலுக்கு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு பொங்கலை முன்னிட்டு நான்கு படங்கள் வெளியாகி உள்ளன. இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் பீர்த்தி சிங் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் அயலான். ஏலியனை மையமாக வைத்து அறிவியல் புனைவு படமாக உருவாகியுள்ள இப்படம், பல்வேறு கட்ட பிரச்சினைகளைக் கடந்து ஒருவழியாக வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படம் வெளியாகி உள்ளதால், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அதேபோல் ராக்கி, சாணிக்காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள படம், கேப்டன் மில்லர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். பீரியட் படமாக எடுக்கப்பட்டுள்ள இப்படம், தனுஷ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பண்டியை முன்னிட்டு இப்படம் வெளியாகி உள்ளது. அதேபோல் விஜய் சேதுபதி, கத்ரினா கைஃப் நடித்த மெரி கிறிஸ்துமஸ், விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள மிஷன் சாப்டர் 1 உள்ளிட்ட படங்களும் பொங்கல் பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாகி உள்ளன. இந்த பொங்கல் ரிலீஸ் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றனர்.